நேபாளத்தில்..
சிக்கிமில் வசித்து வரும் ராணுவவீரர் ராம்பிரசாத் சர்மா. இவர் 2020ல் நேபாளத்தில் வசித்து வரும் ருக்மீனாவை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ராணுவத்தில் ராம்பிரசாத் சர்மா பணிபுரிந்து வந்தார். ராம்பிரசாத்- ருக்மீனா தம்பதிக்கு ரித்திமா என்ற 2வயது மகளும் உண்டு.
குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து தனது மனைவி, மகள் இறந்து விட்டதாக ராம்பிரசாத் காவல்துறையில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதில் தாய், மகள் இருவரும் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் பின் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராணுவவீரர் ராம்பிரசாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களை ராம்பிரசாத் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன்படி கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அவர்களுடன் ஒத்து போக முடியவில்லை. இதனால் மனைவி, மகளை கொலை செய்ய முடிவு செய்தார். அதிகாலை 4 மணியளவில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
தனது 2 வயது மகளையும் கழுத்தை நெரித்து ராம்பிரசாத் கொலை செய்துள்ளார். இதன் பின் பெட்ரோலை மீது ஊற்றி தீவைத்து எரித்துவிட்டார். இந்த வாக்குமூலத்தின் பேரில் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பச்சண்டையில் மனைவி, மகளை கொன்று நாடகமாடியதும், ராணுவவீரர் கைது செய்யப்பட்டதும் ஜோத்பூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.