கரூரில்..
தங்கை முறை பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் அதே ஊரை சேர்ந்த கோபிகா என்ற உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்.
கிருஷ்ணமூர்த்திக்கு கோபிகா தங்கை உறவு முறை வருவதால் இந்த திருமணத்திற்கு கோபிகாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஜூலை 21 ஆம் தேதி வழக்கு தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, தொட்டியம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இதையறிந்த கோபிகாவின் உறவினர்கள் நீதிமன்றத்தின் இருந்து செல்லும் வழியில் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இந்தநிலையில் நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பாததால், அவரது மனைவி கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீநாத், கார்த்திக், சரவணன், கோபால கிருஷ்ணன் ஆகிய 4 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோபிகாவின் அண்ணன் ரவிவர்மன், அவரது நண்பர் தினேஷ், கோபிகாவின் தாயார் ஹேமலதா, பாட்டி பாப்பாத்தி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்து ஆற்றில் வீசிய அதிர்ச்சி தகவல்களை வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து கடத்தல் வழக்கை கொலை வழக்காக பதிவுச் செய்த போலீசார், கோபிகாவின் தாய் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.