மனைவியை கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை!!

581

Murder

தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து புத்தளம் – முந்தல் பொலிஸில் பதிவாகியுள்ளது.

இன்று (12.06) அதிகாலை மதுரங்குளம் – கரிகட்டிய பிரதேச காட்டில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள அதேவேளை அருகிலிருந்த மாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் புத்தளம் – சிராம்பியடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஆண் மற்றும் 26 வதான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தம்பதியருக்கு 11 வயது மற்றும் 9 வயதான இரு ஆண் பிள்ளைகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் பாடசாலைக் காலத்தில் அவரது கணவனால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரது ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த கணவன் – மனைவி கடந்த காலத்தில் ஒப்பந்தக்காரர் ஒருவரின் கீழ் வேலைக்குச் சென்றுள்ளனர். இதன்போது பிள்ளைகளை மதுரங்குளி பிரதேசத்திலுள்ள உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

முந்தல் பொலிஸார் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.