கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற போது சோகம்.. ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!!

787

காவிரியில்..

ஆடிப்பெருக்கு தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் காவிரி ஆற்றங்கரைக்கு வந்து ஆற்றுக்கு படையலிட்டனர். சிறப்பு பூஜைகள் செய்து காவிரித்தாயை வழிபட்டனர்.



காசிபாளையத்தில் கொந்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சிலர் காவிரி ஆற்றில் இறங்கினர். ஆற்றில் தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியது.

இந்த ஆற்று வெள்ளத்தில் கொந்தாளம்புதூரில் வசித்து வரும் 18 வயது ஜகதீஷ், 14 வயது சவுத்ரி, 17 வயது குப்புராஜ் ஆகியோர் நீரில் மூழ்கத்தொடங்கினர் . சுற்றி இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பலனில்லை.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சௌத்ரியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

மற்ற இருவரின் உடல்களையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிலுக்காக தண்ணீர் எடுக்க சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.