பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான அவமானம் தாங்காமல் தீக்குளித்த 15 வயதுச் சிறுமி பலி!!

606

fire

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பத்தாம் வகுப்பு மாணவி, கோவை அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 15 வயது மகள், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அமைதி நகரை சேர்ந்த குணசேகரன், லதா தம்பதியரின் மகன் இளங்கோ கார்த்திக், 24.

இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் திகதி, மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற இளங்கோ கார்த்திக், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின் வீடு திரும்பிய மாணவி, நடந்ததை தன் பெற்றோரிடம் தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளங்கோ கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று, அவரின் பெற்றோரிடம் நியாயம் கேட்டனர். அப்போது அவர்கள் தகாத வார்த்தைகள் பேசி வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதில் மனமுடைந்த மாணவி, தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சிகிச்சைக்காக கோவை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அம்மாணவி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி மகளிர் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தைகள் பாலியல் தடுப்புச்சட்டம், பெண் வன்கொடுமை சட்டம், பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இளங்கோ கார்த்திக், 24, அவரது பெற்றோர் குணசேகரன், 48, லதா 40, அத்தை ராஜலட்சுமி 37, ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.

பின், அவர்கள் பொள்ளாச்சி ஜே.எம் 1 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கோவை அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிசிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து சிறையில் உள்ள இளங்கோ கார்த்திக் மற்றும் அவரின் பெற்றோர், அத்தை ஆகியோர் மீது, தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.