பெங்களூரில்..
பெங்களூரில் தங்களது 8 மாத கைக்குழந்தை உள்பட 2 மகள்களையும் கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூரு.. இங்கு வசிப்பவர் வசித்து வருபவர் வீர்அர்ஜூன விஜய். இவருக்கு வயது 31. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர். தொழிலுக்காக பெங்களூர் வந்தவர் இங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார். இவரது மனைவி ஹேமாவதி. அவருக்கு வயது 29.
இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு 6 வயதும், மற்றொரு குழந்தைக்கு 8 மாதமுமே ஆகிறது. விஜய் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் பெங்களூரில் உள்ள கடுகொடியில் உள்ள சாய் கார்டன் அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக விஜய்யின் வீட்டில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உள்ளே விஜய், அவரது மனைவி ஹேமாவதி, அவரது இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் சடலமாக கிடந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், உடனடியாக அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏ.என்.ஐ.யில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, விஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது மகள்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், விஜய் தன்னுடைய மனைவியை முதலில் கொலை செய்துவிட்டு ஒருநாளுக்கு பிறகு தன்னுடைய 2 மகள்களையும் கொலை செய்தார் என்றும், அதன்பின்பு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த மரணங்கள் தொடர்பாக போலீசார் விஜய் மற்றும் ஹேமாவதி இருவரது செல்போன்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த விஜய்க்கு கடன் தொல்லை ஏதும் இல்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்த மரணங்கள் கொலையா? தற்கொலையா? விஜய் – ஹேமாவதி இணைந்துதான் குழந்தைகளை கொன்றனரா? ஹேமாவதி, 2 குழந்தைகள் என 3 பேரையும் விஜய்தான் கொலை செய்தாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெங்களூர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.