85 வயது மாமன் மடியில் காது குத்திய 55 வயது மருமகன்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

363

வேலூரில்..

85 வயது தாய்மாமன் மடியில் அமர்ந்து 55 மற்றும் 52 வயது மகன்களுக்கு காது குத்தும் விழா நடைபெற்றது தொடர்பான செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்திருக்கும் ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் – கோவிந்தசாமி தம்பதி.



இந்த தம்பதிக்கு 5 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 7 பிள்ளைகள் இருக்கும் நிலையில், கோவிந்தசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இதில் அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணமாகி பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

இந்த சூழலில் 80 வயதான கண்ணம்மாளுக்கு நிறைவேறாத ஆசை இருந்துள்ளது. அதாவது இவரது அனைத்து பிள்ளைளுக்கும் காது குத்தும் விழா நடைபெற்ற நிலையில், தற்போது 55 வயதாகும் முனிவேல், 52 வயதாகும் ராஜா ஆகிய 2 மகன்களுக்கு மட்டும் காது குத்தாமல் இருந்துள்ளது.

இதனால் தனது ஆசையை தனது பிள்ளைகளிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதனை கேட்டு நகைத்த பிள்ளைகள், பின்னர் தங்கள் தாயின் ஆசையை நிறைவேற்ற முனைப்பு காட்டியுள்ளனர்.

அதன்படி அவர்களது குலதெய்வ கோயிலான கன்னியம்மன் கோயிலில் காதணி விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததோடு உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் 80 வயதான கண்ணம்மாளின் 85 வயதான சகோதரனுக்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளனர். ஏனெனில் கண்ணம்மாளின் 2 மகன்களுக்கும் அவர் தான் தாய் மாமன்.

எனவே 85 வயது தாய்மாமன் மடியில் 55 மற்றும் 52 வயது மகன்களுக்கு காது மொட்டை அடித்து காது குத்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அந்த 2 மகன்களும் தனது தாய் கண்ணம்மாளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என அனைவர் முன்பும் நடைபெற்ற இந்த காதணி விழா தற்போது ஊர் முழுவதும் அனைவரது கவனத்தையும் பெற்று பேசுபொருளாக மாறி வியப்பில் ஆழ்த்தியுள்ளது.