பிரகாஷ்ராஜ்..
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் கட்சியான பாஜக மற்றும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரிக்கு சிறப்புரை ஆற்ற சென்றிருந்தார். அவரது உரை முடிந்து கிளம்பியதும் தயாராக வைத்திருந்த கோமியத்தை அவர் நின்று சிறப்புரை ஆற்றிய இடம் மற்றும் அவரது காலடி பட்ட அனைத்து இடங்களிலும் மாணவர்கள் கோமியம் தெளித்து சுத்தம் செய்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் இந்துத்துவா அமைப்பினரையும், அவர்களின் கொள்கைகளையும் பொது மேடைகளில் தாக்கி பேசி வருகிறார் இதற்கிடையே தான் கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இதற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் கல்லூரி அருகே போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பிரகாஷ்ராஜ் சிறப்புரை ஆற்றினார். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மாணவர்களில் ஒரு தரப்பினர் கோமியம் எடுத்து சென்று நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.
மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என முத்திரை குத்தி உள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கோமியம் கொண்டு சுத்தம் செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதே போல் பல சம்பவங்கள் அரங்கேறி பெரும் பேசுபொருளானதும் குறிப்பிடத்தக்கது.