ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் சின்னபொலமடா கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா. இவரது மனைவி ஓபுலம்மா. இந்த தம்பதியின் மகன் மஞ்சுநாத். இவருக்கு வயது 27.
புட்லூர் மண்டலம் கருச்சிந்தலப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் 24 வயது ரமாதேவியை காதலித்தார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் முதலில் சம்மதிக்கவில்லை. வேறுவழியின்றி இருவீட்டாரும் சம்மதித்து கடந்த பிப்ரவரியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
கடந்த திங்கள்கிழமை மாலை சலவாரிப்பள்ளி கிராமம் அருகே ரயில் முன் பாய்ந்து ரமாதேவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் கணவருடன் மொபைலில் பேசி உள்ளார்.
மனைவி ரமாதேவி இறந்த செய்தியறிந்த மஞ்சுநாத்தும் திங்கட்கிழமை இரவு 2 முறை ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை 3 மணிக்கு மஞ்சுநாத் வீட்டில் இருந்து வெளியே வந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மருமகன் மஞ்சுநாத் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக ரமாதேவியின் பெற்றோர் ஜிஆர்பி போலீசில் புகார் அளித்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.