தென்காசியில்..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கல்லூரணி கிராமம் வஉசி நகரில் வசித்து வருபவர் சின்னத்துரை. இவரின் மகள் குமுதா. இவருக்கும் ராயப்பநாடானூர் கிராமத்தில் வசித்து வரும் வேலாயுதம் மகன் சுதர்சனுக்கும் 6 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.
இதில் சென்னையில் காவலராக பணிபுரிந்து வரும் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் வாழ்ந்தார். சென்னையில் வீடு பார்த்து விட்டு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவின் தாய் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார்.
கூறியபடி குமுதாவை அழைத்துச் செல்லவில்லை. குமுதா தொலைபேசியில் அழைத்தாலும் சுதர்சன் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு குமுதாவிடம், உன்னை எனக்குப் பிடிக்கவில்லை.
நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் எந்தவித பலனும் இல்லை. தொலைபேசியில் குமுதா அழைக்கும் பொழுதெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருந்துள்ளார்.
தன்னை அழைத்து செல்வார் என்ற ஏக்கத்திலேயே இருந்த குமுதா, நேற்று முன் தினம் இரவில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சுதர்சன் வந்திருந்ததை அறிந்து தனது உறவினர்களுடன் சேர்ந்து சுதர்சனின் வீட்டுக்கு சென்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
குமுதா நீண்ட நேரம் சுதர்சனின் வீட்டு வாயிலில் இருந்த போதும் சுதர்சனின் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் குமுதா தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சுதர்சன் குமுதாவை மொபைலில் அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மன அழுத்தத்தில் இருந்த குமுதா நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பதான கல்யாணமாச்சு… தாலிக் கயிற்றின் மஞ்ச வாசம் கூட மறையலையே அதுக்குள்ள என்ன அவசரம் இப்படி தூக்கில் தொங்கிட்டாளே… என இச்சம்பவம் அந்த கிராமம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.