பெண் மர்ம மரணம் : கணவன், மாமனாருக்கு போலீஸ் வலைவீச்சு!!

508

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருமணமாகி 4 வருடமான நிலையில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாமனார், கணவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ். இவர் தனியார் ஓட்டுநராகவும், அவ்வப்போது எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார்.

இவருக்கும், தெற்கு தெரு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரது மகள் ஷாலினி (பி ஏ) ஆகிய இருவருக்கும் நான்கு வருடத்திற்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

பிரகாஷ், மனைவி ஷாலினி மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோருடன் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் கணவர் பிரகாஷ், மனைவி ஷாலினிக்கும் பிரச்சினை ஏற்பட்டு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷாலினி வீட்டில் பின்புறம் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினர் ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஷாலினி மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கணவர் பிரகாஷ், மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 2 வயதில் குழந்தை இருக்கும் நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.