மத்தியபிரதேசத்தில்..
மத்தியபிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டம், ஜாத்ரி கிராமத்தில் ராணிதேவி தன்னுடைய மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். ராணி தேவி, தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மகன் ஸன்னியுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்.
வீட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தபோராவுக்கு அருகில் சென்ற போது எதிரே வந்த பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதலுதவி அளித்த பிறகு மருத்துவர்கள் இருவரையும் 80 கிமீ தொலைவில் உள்ள ரேவா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். கொண்டு செல்லும் வழியிலேயே ராணி தேவி உயிரிழந்தார்.
இந்த தகவல் மற்றொரு மகன் சூரஜ்ஜுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சூரஜ் உடனே தாயின் முகத்தை பார்க்க அவருடைய நண்பர் அபிஷேக் சிங்குடன் ஒரு காரில் புறப்பட்டார்.
அந்த கார் சாட்னா மாவட்டம் ராம்பூர் பகேலன் பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கியது. டிரைவருடன் 3 பேரும் ரேவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சூரஜ் உயிரிழந்தார்.
தாய், மகன் இருவரது உடல்களும் ஜாத்ரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 12மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து தாயும் மகனும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.