அவிநாசியில்..
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
அருகில் உள்ள தனியார் பள்ளியில் கபில்தேவ் 11ம் வகுப்பும் கந்தேஸ்வரி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கந்தேஸ்வரிக்கு காலில் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல கந்தேஸ்வரி பள்ளிக்கு சென்று பள்ளியில் காலை நடைபெற்ற இறை வழிபாட்டில் கலந்துகொண்டபோது திடீரென கந்தேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கந்தேஸ்வரியை அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்ததில் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறியதை அடுத்து, உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.