பல நாடுகள்… பல விருதுகள்.. கடல் கடந்து நடனக்கலையை வளர்க்கும் இலங்கையர்!!

686

லண்டனில்..

நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து வருவதாக கூறும் இலங்கையரான ஜெயந்தி யோகராஜா லண்டனில் தமது நாட்டியப் பாடசாலையில் பல நாட்டு மாணவர்களுக்கு நாட்டியக்கலையை பயிற்றுவிக்கிறார்.



இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் குடியிருந்து வரும் ஜெயந்தி யோகராஜா பரத நாட்டியத்தை மூன்று வயதில் கற்கத் தொடங்கி, 13 வயதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்தியுள்ளார்.

நுண்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஜெயந்தி யோகராஜா வீணை, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளையும் வாசிக்கும் திறமை பெற்றவர். மட்டுமின்றி, லண்டனில் உள்ள சலங்கை நர்த்தனாலயா அகாடமியின் இயக்குநராகவும், கிரிபின் கல்லூரி நடனத்துறை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

அத்துடன் நெதர்லாந்து, ஜேர்மனியில் உள்ள பாடசாலைகளில் நாட்டிய ஆசிரியராக பணியாற்றியுள்ளார். லண்டன் மட்டுமின்றி, நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.

அங்குள்ள பாடசாலைகளில் முன்னாள் மாணவர்களை நடன ஆசிரியர்களாக நியமித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2019ல் நடன நிகழ்ச்சியும், 2023ல் லண்டனில் சரஸ்வதம் பிரவாஹம் நாட்டிய நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார்.

மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சிகளால் நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக ஜெயந்தி யோகராஜா தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் அருங்காட்சியகத்தில் பல ஆங்கிலேயர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டியக்கலை தொடர்பில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ள அவர், பல மொழிகளில் அந்த நூல்கள் இருப்பதால் உலகளாவிய ஆதரவு கிடைப்பதாகவும், மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் அகில இந்திய நாட்டிய சங்கத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள இவர் இதுவரை 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.