சேலத்தில்..

சேலம் கன்னங்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலக். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் இருந்து சேலத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வந்தார் திலக்.

அவரது தந்தை சிவராமன், தாய் வசந்தா, மனைவி மகேஸ்வரி மற்றும் ஆறு வயதில் பிறவியிலிருந்து பேச முடியாத குழந்தை சாய் கிரிசாந்த் ஆகியோருடன் வசித்து வந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து அதன் மூலமாக வருமானத்தையும் ஈட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் திலக்கின் ஒரே மகன் பிறவியிலிருந்து வாய் பேச முடியாமல் இருந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் திலக் குடும்பத்தினர் இருந்துள்ளனர். தொடர்ச்சியாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் கோவிலுக்கு சென்று குழந்தைக்கு பேச்சு வர வேண்டும் என பிரார்த்தனை நடத்தி வந்துள்ளது.

இதேபோன்று நேற்று இரவு திலக் கோவிலுக்கு சென்று வந்ததாக கூறி வீட்டிலிருந்து தந்தை, தாய், மனைவி மற்றும் குழந்தைக்கு பிரசாதம் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்தப் பிரசாதத்தில் திலக் விஷம் வைத்து கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பிரசாதம் சாப்பிட்டு திலக்கின் தந்தை சிவராமன், மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் சாய் கிரிசாந்த் உயிரிழந்துள்ளனர். திலக்கின் தாய் வசந்தா மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இன்று காலை பெங்களூரில் பணியாற்றி வரும் திலக்கின் அண்ணன் வீட்டிற்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்துள்ளார். உடனடியாக சேலத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி இருக்கிறார்.

உடனடியாக திலக்கின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் பலமுறை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். யாரும் வராததால் உடனடியாக கன்னங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் கதவிற்கு அருகில் இருந்த கண்ணாடியை உடைத்து கதவை திறந்தனர். அப்போது திலக்கின் தாய் வசந்தா மயக்கமான நிலையில் தவழ்ந்த படி வந்துள்ளார். திலக்கின் தந்தை சிவராமன் அவரது அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

மேல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று பார்த்தபோது திலக் தூக்கில் தொங்கியபடியும், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் சாய் கிரிசாந்த் உயிரிழந்த நிலையில் கீழே கிடந்துள்ளனர்.

மேலும் உயிருடன் இருந்த திலக்கின் தாய் வசந்தாவை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். திலக்கின் அறையில் சோதனை நடத்திய காவல்துறையினர் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.

அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் பெருமளவில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கைப்பற்றிய கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.





