கேள்வியால் துளைத்த உறவினர்கள்.. தம்பதியர் எடுத்த விபரீத முடிவு!!

463

மதுரையில்..

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் மனமுடைந்த மதுரையைச் சேர்ந்த தம்பதியர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று அங்கேயே தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை: திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மதுரையைச் சேர்ந்த தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நடைபெறும் பாதி பிரச்சினைகளுக்கு அக்கம்பக்கத்தினரும், நாகரீகமே தெரியாத சில உறவினர்களும்தான் காரணம். ஒரு இளைஞனுக்கோ, இளம்பெண்ணுக்கோ திருமணம் சிறிது தள்ளிச் சென்றாலே போதும்.. உடனே கிளம்பி வந்து விடுவார்கள் மக்கள்.

“ஏன் உனக்கு திருமணம் தள்ளிப் போயிட்டே இருக்கு”.. “ஜாதகத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கா”.. பையனுக்கு ஏதாவது குறை இருக்கும் போல” என வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததை போல பேசி பேசியே சம்பந்தப்பட்டவர்களை பதட்டம் அடைய செய்து விடுவார்கள்.

திருமணம் தானே பிரச்சினை.. சரி திருமணமும் செய்தாகிவிட்டது என்றாலும் அவர்கள் விட மாட்டார்கள். திருமணமாகி 3 மாதத்திலேயே வீட்ல விசேஷம் இருக்கா என கேட்டு நச்சரிக்க தொடங்கி விடுவார்கள்.

இவர்கள் கொடுக்கும் அழுத்தம்தான், சம்பந்தப்பட்டவர்களை ஏதோ குறை உள்ள மனிதர்கள் போல மாற்றிவிடும். இதுவே சில விபரீதத்திற்கும் காரணமாகி விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் மதுரையில் நடந்திருக்கிறது. மதுரை மாவட்டம் தல்லாகுளத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – சித்ரா புஷ்பம் தம்பதியர்.

இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் பேசும் பேச்சுகள் இந்த தம்பதியரை மிகவும் காயப்படுத்தியுள்ளது. மேலும், விசேஷ வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவர்களும் பல மருத்துவமனைகளுக்கும், கோயில்களுக்கும் ஏறி இறங்கியுள்ளனர். ஆனால், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த தம்பதியர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் அவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு பல இடங்களை அவர்கள் சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் ஒரு அறை எடுத்து தங்கிய அவர்கள், அன்றைக்கு இரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.