கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி அருகே மனைவி மீது உள்ள கோபத்தால் இரண்டு மகன்களை கழுத்தை நெரித்து தந்தை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் சுரேஷ் (35).
செங்கல்பட்டு மாவட்டம் கெங்கதேவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா (31). 10 ஆண்டுகளுக்குமுன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெர்லின் சஞ்சு(9), கேசவ்(6) என 2 மகன்கள். பெர்லின் 4ஆம் வகுப்பும், கேசவ் 1ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாகவே கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு இருந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரிதா தனது கணவர் மற்றும் மகன்களை பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் கங்கதேவன்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பெர்லின் சஞ்சு மற்றும் கேசவை சுரேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றார். இந்நிலையில் சுரேஷின் தந்தை வீட்டிற்கு சென்று பார்தபோது பேரன்கள் இருவரும் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்தத் தகவலின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சுரேசை தேடி வந்தனர்.
இதில் கங்கதேவன்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த சுரேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சுரேஷ் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், “என் மனைவி எனது நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதன் காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தது. இதனால் நான் விரக்தி நிலைக்கு சென்றேன்.
என் மனைவி என்னிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். இதில் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் நான் சென்றுவிட்டால், குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என கருதினேன். எனவே முதலில் அவர்களை முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுவிட்டேன்.
பின்னர் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமான மனைவி கொல்ல திட்டமிடேன். அதன்படி நான் எனது மாமியார் வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன்.
அப்போது என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்” என்று கூறியுள்ளார். மனைவி மீது உள்ள கோபத்தால் இரண்டு மகன்களை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.