
தேசிய மொழிக்கொள்கையை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய மொழிக்கொள்கைகளை மீறும் நபர்களுக்கு எதிராக தராதாரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மொழிக்கொள்கைகளை மீறிச் செயற்படும் தரப்பினர் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் என்னிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
வட மாகாணசபை நிர்வாகம் தமிழ் மொழியில் மட்டும் ஜாதிக ஹெல உறுமயவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமை, சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை வினாத்தாள் ஆங்கில மொழியில் மட்டும் அச்சிட்டமை ஆகியன தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தேசிய மொழிக்கொள்கை மீறப்பட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சில வீதிகள் பாதைகளுக்கு அரேபிய மொழியில் பெயரிடப்பட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





