2 மகன்களை எரித்து கொன்ற தாய்.. தானும் தற்கொலை செய்த சோகம்!!

555

திருவட்டாரில்..

திருவட்டார் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்து கொன்றுவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பூவன்கோடு புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45).

சென்ட்ரிங் கான்ட்ராக்டர். இவரது மனைவி ஷீபா (40). இவர்களுக்கு கெபின் (15), கிஷான் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு பக்கவாத நோய் தாக்கியதால் காலில் சிறிய குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காலை சற்று சாய்த்தவாறு செல்வர்.

அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது தொடர்பாக ஏசுதாஸ் மற்றும் ஷீபா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே கணவன், மனைவி இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏசுதாஸ் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் 2 மகன்களுடன் மனைவி உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் நொந்து போன ஏசுதாஸ் அதே பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீரென்று அவர்கள் வீட்டில் இருந்து காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் தீயில் கருகி துடித்துக் கொண்டிருந்தனர். திருவட்டார் போலீசார் வந்து 3 பேரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அடுத்தடுத்து மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குடும்ப தகராறில் 2 மகன்களை தீவைத்து கொன்றுவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.