தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் : உறவினர்கள் போராட்டம்!!

556


கும்பகோணத்தில்..கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த மருத்துவமனையில் வைஷ்ணவி செவிலியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அவர் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.கும்பகோணத்தில் பா.ஜ.க பிரமுகருக்குச் சொந்தமான மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர், மருத்துவமனைக்கு உள்ளேயே தற்கொலை செய்துகொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். பா.ஜ.க-வில் சிந்தனை பிரிவு மாநில துணைத் தலைவராக இருக்கிறார். இவர் பல கிளைகளைக் கொண்ட நிதி நிறுவனத்தையும், காமராஜர் சாலையில் `பாமா சுப்ரமணியம்’ என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றையும் நடத்திவருகிறார்.


இந்த மருத்துவமனையில் திருவிடைமருதூர் திருமாந்துறை அருகேயுள்ள தோப்புத்தெருவைச் சேர்ந்த வைஷ்ணவி (22) என்ற இளம்பெண், செவிலியராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், வைஷ்ணவி நேற்று மருத்துவமனை வளாகத்திலுள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த அவரின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனர்.


கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வைஷ்ணவியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், “அவரது சாவுக்கான காரணம் தெரியாமல், உடலை வாங்க மாட்டோம்” என போராட்டம் நடத்திவருகின்றனர் உறவினர்கள்.

இது தொடர்பாக உறவினர்கள் சிலரிடம் பேசினோம், “பா.ஜ.க பிரமுகரான கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான மருத்துவமனையில் வைஷ்ணவி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக செவிலியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர், போலீஸார் மூலம் தகவல் சொல்லப்பட்டது. வைஷ்ணவி இறந்த தகவலை அவரின் குடும்பத்திடம் மருத்துவமனை நிர்வாகம் முறையாக நேரடியாகத் தெரிவிக்கவில்லை.

உடலை பார்ப்பதற்கு நிர்வாகத்திலிருந்து இதுவரை யாரும் வரவில்லை. அவர் தூக்கில் தொங்கிய விதம் எங்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. அத்துடன் வைஷ்ணவி உறுதியாக இருக்கக்கூடியவர். எளிதில் எதற்கும் கலங்கமாட்டார்.

அப்படிப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்ப முடியவில்லை. போலீஸார் உரிய விசாரணை நடத்தி அவரது இறப்புக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று, உடலை வாங்க மறுத்துப் போராடி வருகிறோம்” என்றனர். இது குறித்து கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் பேசினோம். “வைஷ்ணவி இறப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.