உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்ற பிரமுகரால் பட்டினியில் வாடிய வறிய குடும்பம்!!

913


கம்பளையில்..அதிவிசேட பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவர் உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றதனால், அவர் திரும்பும்வரை ஐவர் அடங்கிய ஒரு குடும்பத்தையே பட்டினியால் வாட செய்த சம்பவமொன்று கம்பளை, வாரியகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பலாக்காயை தோளில் சுமந்திருந்த தந்தையும் சிறு பிள்ளையும் அதிவிசேட பிரமுகர் கடந்து செல்லும் வரை பிரமுகரின் பரிவாரங்கள் வீதி ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.கண்டி தலதா பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்காக கண்டிக்கு சென்ற அதிவிசேட பிரமுகர், பெரஹரா ஆரம்பிப்பதற்கு முன்னர், வாரியகல பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மதிய உணவை உண்பதற்காக சென்றுள்ளார்.


பிரமுகர் யாருக்கும் தெரிவிக்காமல் இந்த பகுதிக்கு வந்திருந்த நிலையில் , அந்த தகவல் அப்பகுதி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதற்கிடையில் அப்பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மதிய உணவிற்கு பலாக்காய் ஒன்றை பிடுங்கி, தோளில் சுமந்தவாறு, வந்துள்ளார்.


அதிவிசேட பிரமுகர் திரும்பிச்செல்லும் அந்த வீதியில், சிறுவனுடன் ஒருவர் வருவதைக் கண்டு, பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது, மூன்று குழந்தைகளும் மனைவியும் பசியுடன் இருக்கின்றனர்.ஆகையால் பகல் உணவுக்கு பலாக்காயை அவிப்பதற்கு எடுத்துச் செல்வதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பலாக்காயை கொண்டுவந்த தந்தையையும் பிள்ளையையும் பொலிஸார்; அழைத்துச் சென்று, அப்பகுதியை விட்டு அதிவிசேட பிரமுகர் வெளியேறும் வரை வீதியோரத்தில் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.


இதன் காரணமாக அன்றைய மதியம் தானும் மனைவியும் 3, 7 மற்றும் 9 வயதுடைய பிள்ளைகளும் பட்டினியால் வாட நேர்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கூறினார்.

குறித்த குடும்பஸ்தர் வாழும் வீடு, புடவை மற்றும் சீட்டுகளால் ஆனது என்றும் கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்துவதாகவும் பாதிகப்பட்டவர் தெரிவித்துள்ளர்.