யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெறுள்ளது.
வீட்டில் இருந்த வயோதிபப் பெண் ஒருவரை கொலை செய்து விட்டு தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 3.30 அளவில் வீட்டினுள் உட்புகுந்த கொள்ளையர் குழு ஒன்றே இவ் வயோதிபப் பெண்ணை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதில் சுதுமலையை சேர்ந்த 57 வயதான குமாரலிங்கம் பத்மாவதி என்பவரே பலியாகியுள்ளார். இச் சம்பவம் குறித்து அயலவர்கள் தெரிவிக்கையில்,
கொலையான வயோதிப பெண்நீண்ட காலமாக கொழும்பில் வசித்து வருகின்றார். அவர் சுதுமலையில் உள்ள தனது சொந்த வீட்டை பிறிதொரு வயோதிப பெண் ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.
தற்போது நடைபெறும் சுதுமலை அம்மன் ஆலய திருவிழாவுக்காக கொலையான பெண், கொழும்பில் இருந்து வந்து தனது சொந்த வீட்டில் வாடகைக்கு இருந்த வயோதிப பெண்ணுடன் தங்கி இருந்தார்
இதன் போதே இன்று அதிகாலை கொள்ளையர்கள் வீட்டில் இருந்த இரு வயோதிப பெண்களின் கைகள், வாய் என்பவற்றை கட்டி விட்டு நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.
வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டதால் பத்மாவதி என்பவர் உயிரிழந்து விட்டார். மற்றைய வயோதிப பெண்ணே கொள்ளையர்கள் தப்பி சென்றதும் அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அயலவர்கள் சென்று பார்த்த போது பத்மாவதி உயிரிழந்து காணப்பட்டார். அதன் பின்னர் அயலவர்கள் மானிப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.






