குடும்ப தகராறு.. இயக்கச்சி இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கியுடன் வெளியேறிய சிப்பாய்!!

815

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – பளை இயக்கச்சி இராணுவ முகாம் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் நான்கு மகசீன்களுடன் தனது வீட்டுக்குச் செல்ல முற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்கச்சி முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் விடுமுறையில் குருநாகல் பிரதேசத்தில் உள்ள வீட்டுக்குச் செல்லும் வேளையில் தனது T-56 ரக துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளார்.

விடுமுறையில் செல்லும்போது துப்பாக்கியை ஒப்படைக்காமல் சென்றமையால் முகாமில் பரபரப்பான சூழல் ஏற்பட, குறித்த முகாம் இராணுவத்தினர் சிப்பாயை தேடி பளை புகையிரத நிலையத்துக்குச் சென்றுள்ளனர். எனினும் சிப்பாய் பளை புகையிரத நிலையத்துக்குச் செல்லாமல் கொடிகாமம் சென்று, அங்கிருந்து குருநாகல் செல்வதற்காக புகையிரதத்தில் பயணித்துள்ளார்.

இந்த நிலையில், இராணுவ அணி ஒன்று சிவில் உடையில் பளை புகையிரத நிலையத்தில் ஏறி சிப்பாயை தேடியபோது அவர் புகையிரதத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்.இதன்போது புகையிரதம் கிளிநொச்சி, அறிவியல் நகர் புகையிரத நிலையத்தை அடைந்த நிலையில் உடனடியாக இராணுவத்துக்கு தகவல் வழங்கப்பட்டு, இராணுவ பொலிஸார் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து சிப்பாயை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிப்பாய் இராணுவ பொலிஸாரிடம், குடும்பத் தகராறு காரணமாக துப்பாக்கியை தான் எடுத்துச் சென்றதாக தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சிப்பாய் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.