திருப்பத்தூரில்..
திருப்பத்தூரில் பிரசவத்திற்காக மனைவி தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ரீல்ஸ் செய்வது போல் வீடியோ எடுத்து அனுப்பியதால் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் இருணாபட்டு கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தனேந்திரன். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் ஷாலினி (19). ஷாலினிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு டேம் பகுதியைச் சேர்ந்த சங்கீத் (25) என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
கணவர் வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் குழந்தையோடு ஷாலினி தனது தாய் வீட்டிற்குச் சென்றார். ஒன்றரை மாதமாக தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கணவர் சங்கீத், தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஷாலினியிடம் கூறியுள்ளார்.
மேலும், அந்த பெண்ணிற்கு புடவை எடுப்பது போல் புகைப்படங்களையும், அதே பெண்ணுடன் இருப்பது போன்ற ரீல்ஸ் வீடியோவையும் ஷாலினிக்கு கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு அனுப்பியிருக்கிறார். இதனால், விரக்தியடைந்த ஷாலினி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷாலினியின் பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். ஷாலினி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குரிசிலாப்பட்டு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ஷாலினியின் கணவர் கூறியது உன்மையா? அல்லது விளையாட்டாக கூறினாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கொணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.