என்னைக் கடத்தியவர்கள் ஆயுதம் வைத்திருந்தனர் : வவுனியா மாணவன்!!

318

Student

என்னைக் கடத்தியவர்கள் ஆயுதம் தரித்திருந்தனர் என 19 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு, நேற்று (14.06) விடுவிக்கப்பட்ட மாணவன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவித்தார்.

குறித்த மாணவன் கடந்த 27ம் திகதி வவுனியா நகர்ப்புரத்தில் வைத்து கடத்தப்பட்டார், பின்னர் நேற்று முன்தினம் இரவு மாணவனின் வீட்டிற்கு அருகில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவனின் உடல் நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்து பெற்றோரால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று (14.06) மதியம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று கலந்துரையாடினார்.

இதன்போது மாணவன் தான் வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டதாகவும், காட்டுப் பகுதியொன்றிலேயே தன்னை நால்வர் கடத்தி வைத்திருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்ததுடன் கடத்தியவர்கள் ஆயதம் தரித்திருந்ததுடன் சரளமாக தமிழில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை தான் முன்னர் வாழ்ந்த கிராமம் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு அங்கு வாழ்ந்தாயா என்பதனையே கேட்டிருந்தாகவும் உணவு சீரான முறையில் வழங்கப்படாததுடன் இறுதி மூன்று நாட்கள் தனக்கு முழுமையாக உணவு வழங்கவில்லை எனவும் இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை தான் கடத்தியவர்கள் உறங்கிய சமயமொன்றில் அவர்களின் தொலைபேசியை எடுத்து வீட்டாருடன் தொடர்புகொண்டிருந்ததாகவும் கூறிய மாணவன், தான் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன் என்பது தெரியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தன்னை விடுவித்த அன்று கண்கள் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டு வந்ததாகவும் சுமார் இரண்டு மணி நேரமாக வாகனம் பயணித்துக்கொண்டிருந்ததன் பின்னரே தான் விடுவிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் மாணவன் கூறியுள்ளார்.

இதேவேளை மாணவனின் தாயார் ம.பூமதி கருத்து தெரிவிக்கையில் , வவுனியா நகர்ப்குதியில் மரக்கரி விற்பதற்காக வந்த தனது மகன் உயர்தர வகுப்பு புத்தகம் ஒன்றினையும் பத்திரிகையையும் வாங்குவதற்காக புத்தக கடையொன்றிற்கு சென்றிருந்தான்.

எனினும் உயர்தர வகுப்பு புத்தகம் அங்கு இல்லாததால் பஸ் நிலையத்தில் உள்ள புத்தக கடையில் அதனை வாங்குவதற்கு சென்ற சமயமே கடத்தப்பட்டு 19 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளான் என தெரிவித்தார்.