
இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம், திருவாடானைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. திருவாடானை பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தொண்டியிலிருந்து வந்த டி.என்.65 எஸ்.3411 என்ற எண்ணுள்ள காரில், 12 கிலோ எடையில் 50 தங்கக்கட்டிகள் இருந்தன.
காரில் இருந்த கீழக்கரை முஸ்தபா அமீன், 55, கார் சாரதி தொண்டி புதுபட்டினம் அகமது கபீர், 43, இருவரையும் விசாரித்தனர்.
கீழக்கரையிலிருந்து தொண்டி, திருவாடானை வழி யாக மதுரைக்கு கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தங்கத்தை, இலங்கையிலிருந்து கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3 கோடி 33 லட்ச ரூபாய்.
கடந்த மாதம், அறந்தாங்கியில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் 35 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதில் கைதானவர் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர்.





