குளத்தில் மூழ்கி சிறுமி பலி : 2 பேரின் உயிரைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்!!

954

திருச்சியில்..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 12 வயது சிறுமி குளத்தில் மூழ்கி பலியான நிலையில், நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வையம்பட்டி அருகேயுள்ள கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் விஸ்வஜோதி (12). இவர் என்.பூலாம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார்.

இவர் தன் சகோதரி மகரஜோதி, தேவதர்சினி, ரவி பிரகாஷ் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டுக்கு எதிரே இருந்த முத்தாளம்மன் குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். விளையாடிய உற்சாகத்தில் சிறுமி விஸ்வஜோதி உள்ளிட்ட நான்கு பேரும், ஆழமான பகுதியில் மூழ்கி தத்தளித்திருக்கின்றனர்.

அப்போது அந்தக் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த அதே ஊரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படித்துவரும் சபரீஸ்வரன்(13) என்ற சிறுவன், நீரில் இறங்கி நால்வரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்.

அந்தவகையில், குளத்தில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரவி பிரகாஷ், தேவதர்சினி ஆகிய இருவரின் தலைமுடியைப் பிடித்து குளத்திலிருந்து வெளியே இழுத்துவந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.

மகரஜோதி என்ற சிறுமி தானாகவே போராடி குளத்தினுடைய கரைக்கு வந்திருக்கிறார். இதில் விஸ்வஜோதி மட்டும் நீரில் மூழ்கிய நிலையில் மாயமானார். அதையடுத்து, உயிர்பிழைந்த குழந்தைகளின் அழுகுரல் கேட்டு சாலையில் சென்றவர்கள், ஊர் பொதுமக்கள் எனப் பலரும் ஓடிவந்தனர்.

அதில் சிலர் குளத்தில் இறங்கித் தேட, சில நிமிடங்களுக்குப் பிறகு விஸ்வஜோதி சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வையம்பட்டி போலீஸார், சிறுமி விஸ்வஜோதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்கு பதிவுசெய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தில் சரியான நேரத்தில் சாதுர்யமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன் சபரீஸ்வரனின் செயலை ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

ஆனால், தன்னுடைய கண் முன்னாலேயே நீரில் தத்தளித்த விஸ்வஜோதியைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து சிறுவன் சபரீஸ்வரன் தேம்பியழுதது, அங்கிருந்த பொதுமக்களையே கலங்கவைத்தது.

உயிரிழந்த சிறுமி விஸ்வஜோதியின் தந்தை மலைச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன நிலையில், தாய் உஷா கட்டட வேலைக்குச் சென்றுவந்திருக்கிறார். இந்த நிலையில், பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்றுவந்த சிறுமி விஸ்வஜோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.