ஆசிரியரின் உயிரைப் பறித்த சூதாட்டம் : பணத்தை இழந்த விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

423


திருப்பூரில்..திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு, கேட்டுத்தோட்டம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.இந்தத் தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் பாபு, போலீஸார், இறந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சாய்குமார் (32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், சாய்குமார் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி, அதில் அதிக அளவு பணத்தை இழந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. மேலும், சொந்த ஊரிலுள்ள தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் தனக்கு பணத் தேவை என பல லட்ச ரூபாய் கடன் வாங்கி அந்தப் பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்திருக்கிறார்.


ஒருகட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிய சாய்குமார் தனக்குப் பணம் அனுப்புமாறும், இல்லையென்றால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதாகவும் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசியிருக்கிறார். ஆனால், பணம் கொடுத்தால் சாய்குமார் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவார் என்று எண்ணி குடும்பத்தாரும் பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், பணம் இல்லாத விரக்தியில், திருப்பூர் வந்த சாய்குமார் ஊத்துக்குளி ரோடு கேட்டுத் தோட்டம் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து ரெயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.