
தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதனிற்கு அமெரிக்க அரசில் முக்கிய பதவி ஒன்றை அதிபர் ஒபாமா வழங்கி சிறப்பித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்த சேதுராமன், பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) பொறியியலில் இளநிலை பட்டமும், ஐ.ஐ.டி.யில் உயர்நிலை பட்டமும் பெற்றவர் ஆவார்.
பின்னர், கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், கடந்த 1998ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் சேதுராமன், 400க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது அமெரிக்கா அதிபர் ஒபாமா, அமெரிக்காவின் மதிப்புமிக்க தேசிய அறிவியல் சபை உறுப்பினராக சேதுராமன் பச்சநாதனை நியமித்து கௌரவப்படுத்தியுள்ளார்.





