உனக்கு 54 எனக்கு 24 : காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் : போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!!

665

சேலத்தில்..

காதலுக்கு வயது ஒரு தடையில்லை மனது மட்டும் போதும் என்ற வகையில் சேலத்தில் ஒரு காதல் திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள் எதிர்ப்பால் அது காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய இளசுகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதும், அதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து அவர்கள் பாதுகாப்புடன் வீட்டுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பது போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஒமலூர் அருகேவுள்ள மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும், ஊரிலேயே விசைத்தறி தொழிலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு அதே ஊரைச் சேர்ந்த 24 வயதான பட்டதாரி பெண் விமலா என்பவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.

இருவருக்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், இந்த விஷயம் விமலா வீட்டிற்கு தெரியவர காதலை கைவிடும்படி எச்சரித்துள்ளனர். ஆனால், தனது வீட்டை விட்டு வெளியேறி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார் விமலா. அங்கிருந்து இருவரும் திருவண்ணாமலையிலுள்ள கோயிலுக்குச் சென்று அங்கு தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் செய்துகொண்ட தகவல் அறிந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக கிருஷ்ணன் மீது தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.  போலீஸ் தங்களைத் தேடும் தகவலறிந்த இருவரும் தாராமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

இருவரையும் நேரில் பார்த்து வயது வித்தியாசம் அறிந்த போலீசாரே சிறிது நேரம் திகைத்து நின்றனர். காவல் நிலையத்தில் விமலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணனின் வயதைக் காரணம் காட்டி வேறு இடத்தில் திருமணம் செய்துவைப்பதாகக் கூறி உருக்கமாக பேசி அழைத்துள்ளனர். ஆனால், தான் கிருஷ்ணனுடன் தான் வாழ்வேன் என விமலா திட்டவட்டமாக கூறி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.

விமலா மேஜர் என்பதால் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு சட்டப்படி உள்ளது என அவரது பெற்றோருக்கு காவல் துறை தரப்பில் அறிவுறுத்தினர். மேலும், விமலாவின் விருப்பப்படி அவரை கணவர் கிருஷ்ணனுடன் அனுப்பி வைத்தனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.