பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!

621

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு 11வது முறையாக முன்னேறி உள்ளது.

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது. இதில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர் பக்கர் ஜமான் 4 ரன்களில் ஆட்டம் இழக்க, பாபர் அசாம் 29 ரன்களில் வெளியேறினார்.

எனினும் அப்துல்லா ஷபிக் அரை சதம் எடுத்து வெளியேற பாகிஸ்தான் அணி தடுமாறியது. இறுதியில் முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணியின் இலக்கை 252 ஓட்டங்களுக்கு உயர்த்தினார்.

இதனையடுத்து டக்வர்த் லூயிஸ் விதிப்படி இலங்கைக்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் தொடக்கவீரர் குஷல் பெரேரா 15 ரன்களும், நிஷாங்கா 29 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க இலங்கை அணி தடுமாறியது.

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குஷல் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா அதிரடியாக விளையாடி இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அபாரமாக விளையாடிய குஷல் மெண்டிஸ் இலங்கை அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 87 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஹாரிஸின் அபார பிடியெடுப்பு மூலம் ஆட்டம் இழந்தார்.

இலங்கை அணி கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்தது. கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது ஆட்டத்தின் 41வது ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அபரமாக வீசி தனஞ்செய் டி சில்வா மற்றும் வெல்லால்கலே விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அறிமுக வீரர் ஷமான் கான் வீச முதல் மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே அவர் கொடுக்க நான்காவது பந்து இலங்கை வீரர் பிரமோத் மதுசன் ரன் அவுட் ஆனார்.

இதனால் ஆட்டம் மீண்டும் பாகிஸ்தான் பக்கமே சென்றது. இதனையடுத்து கடைசி இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷாமான் வீசிய பந்தை அசலாங்க அடிக்க அது எட்ஜ் ஆகி பின்னால் பவுண்டரிக்கு சென்றது.

இது மீண்டும் போட்டியை இலங்கை பக்கம் கொண்டு சென்றது. இதை அடுத்து கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அசலங்கா கடைசி பந்தை அடித்து இரண்டு ஓட்டங்கள் ஓடினார்.

இதன் மூலம் இலங்கை அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் 11 வது முறையாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) இந்தியாவும் இலங்கையும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.