லண்டனில்..
லண்டனில் நோயை சரியாக கணிக்கத் தவறிய மருத்துவரால் 9 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முகேஷ் மற்றும் கீதா தம்பதியின் மகள் 9 வயதான ரியா ஹிரானி. பிரித்தானியாவில் Strep A பாதிப்பு பரவலாக காணப்பட்டு வந்த போது, மூன்று நாட்களாக காய்ச்சல், தொண்டை வலி, பேச முடியாமை உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடியுள்ளனர்.
ஆனால் சிறுமியின் நிலை பயப்படும்படி இல்லை என தெரிவித்து வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். கடந்த 2022 டிசம்பர் 23ம் திகதி சிறுமி ரியாவின் வாயில் இருந்து நுரை வெளியேற, பயந்துபோன தாயார் கீதா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி மூச்சுத் திணறுகிறாள் என்று நினைத்து அவள் முதுகில் தட்டியுள்ளார் தந்தை முகேஷ். சட்டென்று சிறுமி ரியா சுருண்டு விழவும், Great Ormond Street மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இதில் சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான மூளை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி ரியா, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நீண்ட 10 ஆண்டுகள் போராடி, கடைசியில் IVF முறைப்படி பிறந்த குழந்தை ரியா என நீதிமன்ற விசாரணையின் போது முகேஷ் மற்றும் கீதா தம்பதி நினைவு கூர்ந்துள்ளனர்.
சம்பவத்தன்று மருத்துவரிடம் தமது மகளின் நிலை குறித்து விரிவாக எடுத்துக் கூறியும், மருத்துவரால் நோயின் தன்மையை உறுதி செய்ய முடியாமல் போனது எனவும் கீதா குறிப்பிட்டுள்ளார்.
தமது மகளுக்கு Strep A பாதிப்பாக இருக்கலாம் என தனது சந்தேகத்தை எடுத்துக் கூறியும், அந்த மருத்துவர் கருத்தில் கொள்ளவில்லை என கீதா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிறுமி ரியாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் எனவும் அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.