வவுனியாவை வந்தடைந்த திருகோணமலையில் தாக்குதலுக்குள்ளான தியாக தீபம் திலீபனின் ஊர்தி!!

2026

திருகோணமலையில் தாக்குதலுக்குள்ளான தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (18.09) அதிகாலை வவுனியாவை வந்தடைந்தது.


தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் ”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் ஊர்திப் பவனியானது அம்பாறை பொத்துவில் பகுதியில் ஆரம்பித்து திருகோணமலையில் வலம் வந்திருந்தது.


இந்நிலையில், திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வைத்து குறித்த ஊர்தி மீது சிங்கள காடையர்களால் நேற்று (17.09) தாக்குதல் நடத்தப்பட்டதுடன், குறித்த ஊர்தியுடன் வந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.

அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து சேதமாக்கப்பட்ட குறித்த ஊர்தி தம்பலகாமம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களும் அங்கு தங்கியிருந்தனர்.

இந்நிலையில் வடக்கில் இருந்து சென்ற இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் துணையுடன் குறித்த ஊர்தியும், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களும் திருகோணமலையில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.

குறித்த ஊர்திப் பவனயானது வடக்கில் தொடர்ந்தும் நினைவேந்தலுக்கான தரிசிப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.