நீரில் விழுந்த மகனை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சோகம்!!

640

தமிழகத்தில்..

நேற்று மிலாடி நபி என்பதால் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. லீவு விட்டாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் சிலநேரங்களில் இந்த கொண்டாட்டங்கள்விபரீதத்தில் முடிந்து விடுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி அருகே லக்கிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் ரமேஷ், மாணிக்கவள்ளி. இவர்களுக்கு கிஷோர் , கிரண்குமார் என 2 மகன்கள் உள்ளனர். கனமழை காரணமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நேற்று விடுமுறை என்பதால், மாணிக்கவள்ளி தனது மகன்களுடன் அருவியில் குளிக்கச் சென்றார். அப்போது அவர், தனது தோழியான ராதிகாவை அழைத்துக் கொண்டு 4 பேரும் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் கிரண்குமார், ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து தாய் மாணிக்கவள்ளி, உடனடியாக செயல்பட்டு மகனைக் காப்பாற்றி, ராதிகாவிடம் கொடுத்தார்.

கணநேரத்தில் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர் மாணிக்கவள்ளியை இழுத்துச் சென்றது. ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். இதுகுறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணிக்கவள்ளியை சடலமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்