கோவையில்..
கோவையில் இளம் கல்லூரி மாணவி வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவர் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக பலியானார்.
கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம், பூண்டி சாலை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 40). இவர் கூலிக்கு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இளமதி, ஆதிரா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இளமதி (17) தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை கணிதவியல் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால், தாய், தந்தை வேலை செய்யும் தோட்டத்திற்கு சென்று, பசு மாட்டிற்கு தேவையான பசுந்தீவனத்தை, இருசக்கர வாகனத்தில் வைத்து, தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்று, முறிந்து இளமதி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த இளமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த ஆலாந்துறை காவல்துறையினர், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் மாணவி மரம் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.