கோண்டாவில் – உரும்பிராய் குழு மோதலில் மாணவன் பலி : 20 பேர் கைது : மக்கள் இடம்பெயர்வு!!!

630

jaffna

மாணவன் ஒருவர் வாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து யாழ்.கோண்டாவில் மற்றும் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேருக்கு மேல் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தெரியவந்துள்ளதாவது,

உரும்பிராய்ப் பகுதியில் ஒரே வீதியில் உள்ள 7 வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் நேற்று முன்தினம் இரவு அடித்து உடைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வீட்டிலும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறியிருந்தமையினால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராயினைச் சேர்ந்த கும்பலொன்று கோண்டாவிலைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரை வாளால் வெட்டி படுகொலை செய்ததன் எதிரொலியாகவே மேற்படி வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மேற்படிச் சம்பவத்தினையடுத்து இரு குழுக்களையும் சேர்ந்த சுமார் 20 பேரை நேற்று இரவு வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த வன்முறைச்சம்பவத்தில் ஈடுபட்ட ஏனையவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் தேடிவருகின்றனர்.

அத்தோடு உரும்பிராய் மற்றும் கோண்டாவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நேற்று இரவும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

யாழ்.கோண்டாவில் பகுதி நாராயணன் கோவிலடியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் யாழ்.சென் ஜோன் கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே நேற்று மாலை துடிதுடித்து உயிரிழந்தார்.

மேலும் உயிரிழந்தவரின் சகோதரியும், சகோதரனும் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக உரும்பிராய் கிழக்கினைச் சேர்ந்த எம்.நிரோஜன் (23) என்பவரை கோப்பாய் பொலிஸார் நேற்று முன்தினம் இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்து கைது செய்து செய்திருந்தனர்.

கோண்டாவில் நாராயணன் கோவிலடியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் உரும்பிராய் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த காரணத்தினால் அப்பகுதி இளைஞர்களுக்கும், உரும்பிராய் பகுதி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் உரும்பிராய் பகுதியினைச் சேர்ந்த டி.ரொபின் ராஜ் (20), எம்.நிரோஜன் (23) என்ற இரு இளைஞர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக உரும்பிராயில் இருந்து வந்த இளைஞர்கள் குழு, கோண்டாவில் நாராயணன் கோவில் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வாள் வெட்டு நடத்தியது. இதில் மேற்படி மாணவர் உயிரிழந்தார்.

மேற்படி வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களின் நடமாட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகரித்து காணப்பட்டமையே பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆவா, டில்லு போன்ற பல குழுக்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை உரும்பிராய் மற்றும் கோண்டாவில் பகுதியனைச் சேர்ந்தவர்கள் பல தமது குடும்பங்களுடன் வேறு இடங்களில் சென்று தங்கியுள்ளனர்.

உரும்பிராயில் 7 வீடுகள் அடித்து உடைக்கப்பட்டதையடுத்து அச்சம் காரணமாக அந்தக் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.

மாணவன் ஒருவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடைய குழுக்கள் இரண்டும் பொது இடம் ஒன்றில் குழு மோதலுக்கு தயாரான நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சினிமாப் பாணியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களும் குழு மோதல்களும் மக்கள் மத்தியில் பரபரப்பையும் அச்ச உணர்வையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழரின் இளைய தலைமுறை திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.