மதுரையில்..
திருப்பரங்குன்றம் அருகே தனது 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதி கிணற்றில் பெண் ஒருவர், தனது 2 வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு திரு நகர் போலீஸார், திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து தாய், மகள் உடல் களை மீட்டனர். போலீஸார் விசாரணையில் தனக்கன்குளம் ஜெயம் நகர் அருகிலுள்ள மிட்டல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்.
இவரது மனைவி ஷாலினி (23), மகள் விசாகா (2). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நிலை பாதித்த நிலையில் கணவர் உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாமல் விரக்தியில் ஷாலினி தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து திரு நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.