புத்தளத்தில்..
புத்தளம் – மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பகுதியில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை 06) இடம்பெற்ற வீதி விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மூவர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
புத்தளம் – சவீவபுரம் பகுதியைச் சேர்ந்த ரிஜான் சித்தி நிஹாரா ( வயது 40) எனும் ஆறு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த அத் தாய் தனது இரண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு புத்தளத்தில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றில் புத்தளம் – மன்னார் வீதியின் 4 ஆம் கட்டை பகுதிக்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அப் பகுதியில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது வீதியின் நடுவே தரித்து நின்ற கட்டாக்காலி மாடு ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன் அதில் பயணம் செய்த முச்சக்கர வண்டி சாரதி உட்பட இளம் தாயும், இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முச்சக்கர வண்டி சாரதி மற்றும் உயிரிழந்த தாயின் இரண்டு பிள்ளைகளுக்கும் சிறிய அளவிலான காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இளம் தாய்க்கு ஏற்கனவே தலைப் பகுதியில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த தாயின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை என்பனவற்றின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.