ஆந்திராவில் கடும் வெயிலுக்கு 300 பேர் பலி!!

841

Hot

ஆந்திராவில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்துகிறது. கடலோர மாவட்டங்களில் 114 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதுடன் அனல் காற்றும் வீசுகிறது.

வெயில் கொடுமைக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 100க்கும் அதிகமானோர் உயிர் இழந் துள்ளனர்.

மேற்கு கோதாவரியில் 37 பேரும், கிழக்கு கோதாவரியில் 16 பேரும், விசாகப்பட்டினத்தில் 35 பேரும், விஜயநகரத்தில் 30 பேரும், ஸ்ரீகாகுளம், கிருஷ்ணா மாவட்டங்களில் தலா 20 பேரும் பலியாகி உள்ளனர்.

முதியவர்களும், குழந்தைகளும்தான் அதிகம் இறந்துள்ளனர். உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 1½ லட்சம் நிவாரணம் உதவியை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இதற்கிடையே மழை வேண்டி மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை ஒரே நேரத்தில் வருண ஜெபம் நடத்த அறநிலைய குழுவுக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் 3 நாள் வருண ஜெபம் நடத்தும்படி அறநிலையத் துறை மந்திரி மாணிக்யாலா ராவ் கூறியுள்ளார். மகாபாரதத்தில் இதேபோல் விராத பர்வ பாராயணம், வருண ஜெபம் நடத்தப்பட்டு மழை பெறப்பட்டதாக வரலாறு உள்ளது என்று அவர் கூறினார்.

இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில், காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் வருண ஜெபம் நடக்கிறது.

புதிய அறநிலையக்குழு அமைக்கும் வகையில் பழைய அறநிலையக் குழுவினர் தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மந்திரி மாணிக்யாலா ராவ் கேட்டுக் கொண்டு உள்ளார்.