நம்மில் சிலர் பாம்பை பிடித்து விளையாடுவதையே, அவர்களது குடும்பத்தார் ஆபத்தான விளையாட்டு என்று கூறுவதுண்டு.
ஆனால் தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் பாம்புகளை வைத்து வித்தை செய்யும் ஒருவர் மிகவும் வீரியம் கொண்ட விஷப்பாம்புகளை கடித்து, விளையாடி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.
மஞ்சளும் கறுப்பும் கலந்த நிறத்தில் தரையில் ஊர்ந்து ஓடும் பயங்கரமான விஷப்பாம்பை மெல்ல குனிந்து மண்டியிட்டு தனது வாயால் கவ்வி அது தனது தலையை சுற்றிப் பிண்ணிக் கொள்வதற்குள் பாம்பின் தலையை தனது பல்லால் கடித்து, சில நிமிடங்கள் வரை இவர் சிறைபடுத்தி வைக்கிறார்.
மேலும் கொடிய விஷம் கொண்ட கருநாகப்பாம்பின் வாயுடன் தனது உதடுகளை பொருத்தி, தனது வாயில் வைத்திருக்கும் உணவை ஊட்டி விட்டும் இவர் அசத்தி வருகிறார்.
இவரது வித்தையை காண வந்த பார்வையாளர் ஒருவர், நான் இதைப்போல் எத்தனையோ பாம்பாட்டிகளை பார்த்து விட்டேன். அவர்களது உயிர் பாம்புக் கடியில் தான் போய் உள்ளது என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.
அதிர்ஷ்டவசமாக இவர் வித்தை காட்டி பிழைத்து வரும் இடத்தில் இருந்து கல்லெறி தூரத்தில், பாம்புக் கடிக்கென அதிநவீன சிகிச்சையளிக்கும் தாய்லாந்தின் சிறப்பு மருத்துவமனையான ரெட் கிராஸ் இன்ஸ்டிட்டியூட் உள்ளது என்பது சற்று ஆறுதலான விஷயம் தான் என்றாலும், வயிற்றுக்காக மனிதன் எப்படி எல்லாம் பிழைக்க வேண்டியுள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, மனது என்னவோ வலிக்கத் தான் செய்கிறது.