பாலக்காட்டில்..
பாலக்காடு அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்த முளயங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (47), மரவேலை செய்யும் ஆசாரி. இவரின் மனைவி சுசித்ரா (37). இவர்களுக்கு அர்ஜூன் (8) என்ற மகன் உள்ளார். அர்ஜூன் பாட்டி வீட்டில் தங்கி 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஷாஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தபோது ஷாஜி தூக்கிட்ட நிலையிலும், சுசித்ரா தரையிலும் சடலமாக கிடந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சடலத்தையும் மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதில், சுசித்ராவின் உடலில் பல்வேறு இடங்களில் ஆயுதத்தால் தாக்கி 7 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. ஷாஜி இறந்து 5 நாட்கள் ஆனதும் பிரேத பரிசோதனையில் தெரிந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து விசாரணை செய்தனர். இதில், நடத்தையில் சந்தேகமடைந்த ஷாஜி கத்தியால் வெட்டி மனைவி சுசித்ராவை கொலை செய்துள்ளார்.
இதையடுத்து 2 நாட்கள் வெளியூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த ஷாஜியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.