ஈரோடில்..
திடீர் உயிரிழப்புக்கள், இளவயது மரணங்கள், மாரடைப்புக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மரணம், நடனம் ஆடிய போது மரணம், மணமேடையில் மரணம், நடந்து சென்று கொண்டிருந்த போது சரிந்து மரணம் , கல்லூரி மாணவன் சரிந்து உயிரிழப்பு என தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் இளம்தாய் குழந்தைக்கு பால் கொடுத்த போது சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சின்னியம்பாளையம் மதன்குமார் மனைவி பூரணி.
இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, பூரணி தன் வீட்டில் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பூரணியின் கணவர் மதன்குமார், அருகில் இருந்தவர்களின் உதவியுடன், கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். மயங்கி விழுந்த பூரணியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பூரணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.