புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

1379

அனுராதபுரத்தில்..

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்ட காரணத்தினால் 10 வயதுடைய இந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.



நேற்று இரவு 7 மணி அளவில் இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தலாவ நகர மத்தியில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கற்கும் தலாவ கரகாட்டவ பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதான டபிள்யூ நிசல்யா நெத்சரணி விமலசேன என்ற சிறுமியே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கொழும்பு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.தனது தாயுடன் பயணித்த சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் தாங்கியில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாகவும், இதன் போது சிறுமி வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனிம், இந்த விபத்தில் குறித்த சிறுமியின் தாய்க்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விபத்தினால் இரண்டு வாகனங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.