பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத் இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் . இதில் கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்தார்.

மஞ்சுநாத்தின் 2-வது மகள், வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். அக்டோபர் 10ம் தேதி அந்த இளம்பெண், தனது காதலனுடன் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு 17 வயது மட்டுமே ஆவதால் போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரத்தில் தனது தங்கைக்கு, கவனா உதவி செய்திருக்கலாம் என மஞ்சுநாத் சந்தேகித்தார். இந்நேரத்தில் அவரது மூத்த மகள் கவனா, தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத், காதலை கைவிடுமாறு கூறி மகளிடம் வாக்குவாதம் செய்தார்.

கவனா தனது காதலை கைவிட்டு விட்டதாக தந்தையிடம் கூறி உள்ளார். எனினும் மஞ்சுநாத் தனது மகளை ரகசியமாக கண்காணித்து வந்தார். கவனா, காதலை கைவிடாமல் இருந்து வந்தது மஞ்சுநாத்திற்கு தெரிந்தது. இதுகுறித்து மகளிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார். அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கவனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கவனா, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அவரை மஞ்சுநாத் கொலை செய்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து மஞ்சுநாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீசார், “வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை மகள் காதலித்ததால் ஆத்திரத்தில், பெற்ற மகளை மஞ்சுநாத் கொலை செய்துள்ளார்.

அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் தாக்கியதில் மயக்கமாக இருந்தபோது கவனாவை அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.





