கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி : 40 அடி தூரத்திற்கு வீசப்பட்ட சிறுவன்!!

1764

நுரைச்சோலையில்..

நுரைச்சோலை நகரில் நேற்று இரவு சிறிய லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான வர்ணகுலசூரிய ஜூட் அனுஷ்க நிஷாந்த என்ற 36 வயதுடைவர் மற்றும் 5 வயதுடைய அரோஷ் ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.



இவர்கள் கல்பிட்டி பாலகுருதாவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவன் கல்குடா கெகுலு பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவராகும்.பாலாவியாவிலிருந்து அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கல்பிட்டியிலிருந்து வந்த சிறிய லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கியின் மேல் பயணித்த சிறுவன் 40 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சிறுவனும், தந்தையும் அவரது நண்பரும் பயணித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தந்தை உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளன. லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.