தந்தையின் சொத்தில் பங்கு கேட்ட சகோதரிகளைக் சூப்பில் விஷம் வைத்து கொன்ற இளைஞர்!!

662

மும்பையில்..

சொத்துப் பிரச்னையில் தன்னுடைய சொந்தச் சகோதரிகளை விஷம்வைத்துக் கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.மும்பை அருகிலுள்ள அலிபாக்கில் வசிக்கும் கணேஷ் மொஹிதே (36), வனத்துறையில் வேலை செய்கிறார். இவருக்கு சோனாலி, ஸ்நேகா என இரண்டு சகோதரிகள். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 16-ம் தேதி அடுத்தடுத்த நாளில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார்கள். இதில் ஸ்நேகா உயிரிழப்பதற்கு முன்பு போலீஸாரிடம் அளித்திருந்த வாக்குமூலத்தில், தன்னுடைய சகோதரன் சூப்பில் விஷம் கலந்து கொடுத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

ஸ்நேகாவின் தாயார் தன்னுடைய மகளின் சாப்பாட்டில் உறவினர் யாரோ விஷம் வைத்துக் கொலைசெய்துவிட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கணேஷைப் பிடித்துச் சென்று விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து அலிபாக் போலீஸ் அதிகாரி சோம்னாத் பேசுகையில், “கணேஷின் தந்தை இறந்தவுடன் குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டைத் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதோடு குடும்பத்தை கவனித்துக்கொள்வதாகக் கூறி, தன்னுடைய தாயாரிடம் சொல்லி, வனத்துறையில் வேலை பார்த்து இறந்துபோன தந்தையின் வேலையைத் தனக்கு வாங்கிக்கொடுக்கும்படி கணேஷ் கேட்டுக்கொண்டார்.

உடனே அவரின் தாயாரும், தன்னுடைய மகனுக்கு வேலை கிடைக்கப் பரிந்துரை செய்தார்.வேலை கிடைத்தவுடன், தன்னுடைய தாயாரின் வங்கிக் கணக்கிலிருந்து கணேஷ் சட்டவிரோதமாக கையெழுத்து போட்டு, பணத்தை எடுக்க ஆரம்பித்தார். கணேஷின் சகோதரிகள் இரண்டு பேரும் குடும்பச் சொத்தில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று கேட்டனர்.

ஆனால், கணேஷ் அதற்குத் தயாராக இல்லை. இதையடுத்து தன்னுடைய கணவரின் வேலையை, தன் மகள்களில் ஒருவருக்குக் கொடுக்கும்படி கணேஷ் தாயார் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனால் கணேஷ் கடும் கோபத்துக்கு ஆளானார்.

அதையடுத்து, கணேஷ் தன்னுடைய சகோதரிகளைக் கொலைசெய்யத் தேவையான விஷத்தை இணையதளங்களில் தேடி வாங்கியிருந்தார். 53 வெப்சைட்டுகளில் விஷத்தைத் தேடியிருந்தார். கணேஷ் காரில் எலி மருந்து தொடர்பான துண்டுப்பிரசுரம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கணேஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துவருகிறோம்” என்றார்.