திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சீதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சிலம்பரசன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் பிரதீபா அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
தாய் பொன்மணி பிரதீபா மற்றும் பக்கத்து வீட்டு சிறுமியை பள்ள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கனகம்மாசத்திரம் வழியாக செல்லும் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அந்த நேரத்தில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் சிறுமி பிரதீபா மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிறுமி சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தாய் கண் முன்னே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
மகள் இறந்ததை கண்டு தாய் துடிதுடித்து கதறி அழுதார். இச்சம்பவம் காண்பவர்களை கண்கலங்க செய்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த குன்னவளம் கிராமத்தைச் சேர்ந்த மதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் உயிரிழப்பிற்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேகத்தடை அமைக்க உறுதி அளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.