ஜார்கண்டில்..
இந்திய மாநிலம், ஜார்கண்டில் கணவரிடம் விவகாரத்து பெற முடிவு செய்த மகளை பட்டாசு, மேளதாளத்துடன் வீட்டிற்கு தந்தை அழைத்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் 28 -ம் திகதி தனது மகளான சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின் குமாருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
இதில், சச்சின் குமார் அம்மாநிலத்தின் மின் வாரியத்தில் இளநிலை இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்த பிறகு, பஜ்ராவில் உள்ள புது வீட்டில் சாக்சியும், சச்சின் குமாரும் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, சாக்சியை வீட்டில் பூட்டி வைத்து சச்சின் குமாரும், உறவினர்களும் சென்றுள்ளனர். ஆனால், இவர்கள் ஒரு மாத காலமாக வீடு திரும்பவில்லை. பின்பு, வீட்டில் உள்ள மளிகை பொருள்களை வைத்து சாக்சி சமாளித்து சாப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை பற்றி சாக்சி, தனது குடும்பத்திடம் தெரிவிக்கவில்லை. அப்போது, வீட்டில் உள்ள சச்சினின் லேப்டாப்பை பார்த்த போது, தனித்தனியாக இரு பெண்களுடன் சச்சின் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சாக்சி, சம்மந்தப்பட்ட இரு பெண்களிடம் ரகசியமாக விசாரித்து கேட்டறிந்தார். அப்போது தான், இரு பெண்களுடன் ஏற்கனவே சச்சினுக்கு திருமணமாகி மூன்றாவதாக தன்னை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.
இதனை, தனது தாய், தந்தைக்கு சாக்சி தெரியப்படுத்தினார். பின்பு, தனது மகளுடைய கணவரின் குடும்பத்தாருக்கு பாடம் புகட்ட பிரேம் குப்தா முடிவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, பிரேம் குப்தா தனது மகள் சாக்சிக்கு மேளதாளம் முழங்க, வழிநெடுக பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இதுகுறித்து பிரேம் குப்தா கூறுகையில், “எனது மகள் ஏமாற்றப்பட்டுள்ளார். அவருடைய விவாகரத்து முடிவை திருமண விழா போல கொண்டாடினேன். திருமணத்துக்குப் பிறகு பிரச்சனைகள் ஏற்படும் பெண்களுக்கு அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்றார்.