பாடசாலைகளை பலிக்கடாக்களாக்க கங்கணம்கட்டி செயற்படும் இணையவழி ஊடகங்கள் காணப்போவது என்ன? சமூக அக்கறையற்ற தன்மையின் வெளிப்பாடு!!(ஒரு கண்ணோட்டம்)

1742

media

அண்மைக் காலமாக பாடசாலைகளை பலிக்கடாவாக்கும் நோக்கில் சில இணையத்தளங்கள் தங்களுடைய செய்தியாளர்களை களத்தில் இறக்கியுள்ளமை தொடர்பில் கல்விச்சமூகம் வேதனை அடைந்துள்ள நிகழ்வு வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக பாடசாலைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். சமூகத்தை தட்டிக் கேட்கின்ற உரிமை ஊடகவியலாளருக்கு உண்டெனில் அதேபோன்று அதனை கட்டிக்காக்கின்ற மிகப்பெரிய பொறுப்பும் ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்பது நிதர்தனமான உண்மையாகும்.

சில்லறைக் காசுகளுக்காக எம் எதிர்கால சமூகத்தை நல்வழியில் கட்டி எழுப்புகிற உன்னத பணியை செய்யும் பாடசாலைகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சேறு பூசும் வகையிலான செய்திகளை வெளியிடுவதன் மூலம் இந்த இணையதளங்களும் செய்தியாளர்களும் காணப்போவது என்ன?

உண்மையிலேயே பாடசாலைகளில் பிரச்சனைகள், லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் இருப்பது உண்மை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அது ஒரு தனிப்பட்டவரை அல்லது ஒரு குழுவைச் சார்ந்த விடயமாகும். அதற்கு முழுப் பாடசாலையும் எவ்விதத்தில் பொறுப்பாக முடியும். எந்தப் பாடசாலை விடயத்தையும் இதில் கருப்பொருளாக எடுத்து இந்த கட்டுரையை எழுதவில்லை. மாறாக ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையை வெளிபடுத்தும் நோக்கில் தான் இக்கட்டுரையை எழுத எத்தனித்துள்ளேன்.

பாடசாலைகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வழிவகைகளை மேற்கொள்வதோடு அல்லது அது தொடர்பாக் யார் யாரிடம் எல்லாம் முறைப்பாடு செய்ய முடியுமோ அதை செய்வது சாலச் சிறந்ததாகும்.

ஊடகவியலாளர்களால் ஒரு சமூக பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முதலில் முனையவேண்டிய மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதோ சமூக அக்கறை சிறிதும் இன்றி தொடர்ந்தும் கல்விச் சமூகத்தை மட்டுமே தாக்குவதை மட்டுமே குறிகோளாக கொண்டு செயல்படும் தன்மையைத்தான் வவுனியா மற்றும் யாழ்ப்பாண பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை மையபடுத்தி திரிவுபடுத்திய செய்திகளை வெளியிட்டு வருகின்றமை வேலியே பயிரை மேய்கின்ற செயலுக்கு ஒப்பானதாகும்.

பாடசாலை என்றால் என்ன என்பதை முதலில் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். பாடசாலை என்பது சமூகத்துக்கு ஏற்றவகையில் நற்பண்புகள், அறிவுத்திறன் மனப்பாங்கு கொண்ட ஒரு மனிதனை உருவாகுகின்ற உன்னத பணியை செய்கின்ற நிறுவனம் ஆகும். அத்தகைய நிறுவனத்தை கையாளுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் முதலியோரின் பங்கு அளப்பெரியது. எந்த ஒரு பாடசாலையும் சமூகத்துக்கு எதிரான மனநிலையுடன் செயற்படுவது கிடையாது. ஒவ்வொரு ஆசிரியனும் எல்லா மாணவர்களும் நற்பிரசைகளாக வர வேண்டும் என்றுதான் நினைகிறார்களே தவிர வேறந்த உள்நோக்கமும் இல்லை.

இணையத்தளங்கள் சமூக வலைதளங்கள் என்பவற்றின் வருகைக்குப் பின் ஆசிரியர்கள், பாடசாலைகள் என்பன தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். “ஆகாத பெண்டாடி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்பது போல் பாடசாலைகளில் இடம்பெறும் சிறுசிறு சம்பவங்களை எல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டும் சமூக மற்றும் இணையத்தளங்களின் இத்தகைய செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்பது எல்லோருடைய அவாவாகும். குறிப்பாக ஊடகவியலாளர்கள் முன்னின்று உழைக்க வேண்டும் என்று கல்விச் சமூகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுகின்றோம்.

குறிப்பாக ஒன்றும் இல்லாத விடயங்கள் கூட இத்தகைய பொறுப்பற்ற ஊடகவியலாளர்கள், இணையத்தளங்களின் செயற்பாடுகள் காரணமாக பூதாகரமாக கிளம்பி எதிர்கால சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உலைவைக்கின்ற செயலாகவே நோக்கப்படுகிறது.

எழுதுவதற்கு ஏராளமான சமூகப் பிரச்சனைகள் கைவசம் ஏராளமாய் இருகின்றன. உதாரணமாக அரச திணைக்களங்களில் இடம்பெறுகிற ஊழல்கள், பொதுமக்களுக்கு இழைக்கப்படுகின்ற இன்னல்கள், சூழலியல் தொடர்பான பிரச்சனைகள், வீதிகள் கால்வாய்களில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுதல் இன்னும் பின்தங்கிய குடும்பங்கள், பின்தங்கிய கிராமங்கள் தொடர்பான பிரச்சனைகள் இவற்றை கையிலெடுத்து சமுகத்துக்கு உங்களால் முடிந்த பங்களிப்பை இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அவற்றுக்கான ஊடகவியலாளர்களால் மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

அதை விடுத்து பாடசாலைகள் அதிபர்கள், ஆசிரியர்கள் மீது மட்டும் சேறு பூசுகின்ற கைங்கரியத்தை மட்டும் நீங்கள் செய்வதால் அடையப்போவது என்ன? ஒன்றுமட்டும் நினைவில் கொள்ளுங்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அதன் வழியே வந்த நீங்கள் அதே சமூகம் மீது சேறுபூச நினைப்பது மட்டும் எவ்வழியில் நியாயம் ஆகும். தொடர்ந்தும் கல்விச்சமூகத்தின் மீது இத்தகைய அநாகரிகமற்ற செயலில் ஈடுபடுவீர்களாயின் பாதிக்கப்படுவது வேறு யாரும் அல்ல. நம்முடைய எதிர்கால சந்ததியினர் மட்டுமே.

2009இற்கு பின்னர் எமது தனித்துவம் அளிக்கபட்டுக்கொண்டிருப்பது உங்கள் கண்முன் இடம்பெறும் செயல் என்பதை மட்டும் ஏன் கவனிக்க தவறிவிட்டீகள். தற்பொழுது பாடசாலை மாணவர்களை மையப்படுத்தியே சமூகத்தை நாசமாக்குகின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை நீங்கள் யாவரும் அறிந்த விடயங்கள்.

எனவே மாணவர்களை நல்வழிப்படுத்துகின்ற செயலை உங்கள் யாராலும் செய்யமுடியாது . அது பாடசாலைகளையும் ஆசிரியர்களையும் சார்ந்த விடயமாகும். அத்தகைய ஆசிரியர்கள் பாடசாலைகளை பற்றிய செய்திகளை பிரசுரிப்பதை விட்டு விட்டு சமூகத்தின்பால் அக்கறையோடு செயற்படுங்கள்.

ஆசிரியர்களுக்காகவோ, பாடசாலைகளுக்காகவோ வக்காளத்து வாங்குவதற்காக இக் கட்டுரையை எழுதவில்லை. சமூகத்தின்பால் கொண்ட அக்கறையின் நிமித்தமே இக்கட்டுரையை வரைய வேண்டிய சூழ்நிலை காரணமாக இக் கட்டுரையை எழுதப்படுகின்றது.

பாடசாலைகள், அதிபர்கள் ஆசிரியர்கள் தொடர்பான முறைப்பாடுகள் எதுவாயினும் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு கல்விசார் அமைப்புகள், பொலிசார், நீதிமன்றம் என்பன இயங்கிக்கொண்டுதான் இருகின்றன. அது தொடர்பாக அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதற்குரிய ஏற்பாடுகளை உதவிகளை உங்களால் முடிந்தால் செய்யுங்கள். அதனை விடுத்தது பாடசாலைகளின் நற்பெயருக்கும், மாணவர்களின் எதிர்காலத்துக்கும் சாவுமணி அடிப்பதை நிறுத்திக்கொண்டு சமூக அக்கறையுடன் செயல்படுங்கள் என்பது அனைவரதும் வேண்டுகோளாகும். மாணவர் சமுதாயம் நல்வழியில் நடக்க கல்விச் சமூகத்துடன் கைகோர்த்து செயற்படுங்கள்.

-பண்டிதர்-