வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றையதினம் (01.11.2023) காலை 10.30 மணியளவில் வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று(01.11.2023) தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை 07மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக காலை 09.30 மணி தொடக்கம் 11.00 மணி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் அரசே ஊழியர் பற்றாக்குறையை நீக்கு, அரசே எங்களுக்காக 5நாள் வேலைத்திட்டத்தினை வழங்கு, அரசே மின்சார கட்டண அதிகரிப்பை இரத்து செய், அரசே மருந்து தட்டுப்பாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்,
அரசே அனைத்து பதவி உயர்வையும் வழங்கு போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் 100க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பில் முன்னெடுத்திருந்தனர்.
சுகாதார ஊழியர்களுக்காக 5 நாள் வேலைத்திட்டத்தை வழங்கல். (வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள்) , மத்திய அரசின் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களிற்காக மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் விடுமுறை தின சம்பள வரையறையை நீக்குதல்,
மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக ரேட் முறையை வழங்குதல் (இதுவரையிலும் வைத்தியர், தாதியர், இடை நிலை வைத்தியர் மற்றும் துணை வைத்தியர் சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.) தற்போது வழங்கப்படும் ரூபா.1000 விசேட கொடுப்பனவு ரூபா.7000 வரை அதிகரித்துக்கொள்வது,
சீருடை கொடுப்பனவு ரூபா.15000 வரை அதிகரித்துக்கொள்வது, முறையான இடமாற்ற முறையொன்று மற்றும் இடமாற்றம் விரைவாக வழங்குதல், ஓய்வூதிய சம்பளத்தை உறுதிப்படுத்துதல் , ஊழியர் பற்றாக்குறையின் போது ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் அனைத்து பதவி உயர்வுகள் வழங்குவது தொடர்பாக முன் நடவடிக்கைகள் எடுத்தல்,
மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதல் மற்றும் சத்திர சிகிச்சைகள் வழமைப் போல் நடாத்துதல், நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதற்காக ரூபா.20,000 இனால் சம்பளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பணிப் புறக்கணிப்புப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.